புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, August 07, 2009

முதல் மழை

குழந்தை அழும்போது, அது பாலுக்கானதா, அணைப்புக்கானதா, ஈரத்திலிருந்து விடுபடும் நோக்கத்துக்கானதா, புறப் பொருட்களின் இம்சையினின்றும் மீள்வதற்கானதா என்பதைப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்யும் தாயின் செயல்களில் துவங்குகிறது அங்கீகாரம் என்கிற விஷயம். ஒவ்வொரு வயதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதோவொரு சொல்லுக்கான, செயலுக்கான அங்கீகாரத்தை மனித மனம் யாசித்துக் கொண்டே இருக்கிறது. சரியான அங்கீகாரம் கிடைத்து விடுகிற பொழுதில் கிடைக்கும் இன்பம் சிந்தனைக்கப்பாற்பட்டது. எனக்கு சமீபத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற தெர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளுள் என்னுடையதும் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. சிறுகதை என்ற தளத்தில் நான் ஒரு நல்ல வாசகன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எந்த அளவுக்கு நான் ஒரு நல்ல படைப்பாளி என்பதைப் படிப்பவர்களே சொல்ல வேண்டும். முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டதைப் போல, நான் தீராத காதல் கொள்கிற ஓர் இலக்கிய வடிவம் சிறுகதை. கவிதைகளை விடவும் நான் சிறுகதைகளை அதீதமாக நேசிக்கிறேன். என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை, நான் பார்த்த மனிதர்களை, நான் விரும்புகிற வாழ்வைப் பதிவு செய்ய ஒரு நல்ல ஊடகமாக சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் நான் சிறுகதைகளை அதிகமாக எழுதியதில்லை. சமீபத்தில் அதிர்ஷ்ட வசமாகவோ, துரதிர்ஷ்ட வசமாகவோ எனக்குப் பணியில் இருந்த கிடைத்த மூன்று மாத இடைவெளியில் சில சிறுகதைகளை எழுதி, பதிவிடாமலே வைத்திருக்கிறேன். கொஞ்சம் திருத்தங்கள் செய்து அவற்றை வெளியிடும் எண்ணம் உண்டு.

இந்த முதல் அங்கீகாரம் எனக்குத் தெம்பளிக்கிறது. நானும் சிறுகதைகள் எழுதலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

இந்தப் பதிவை ஒரு நன்றி சொல்லும் பதிவாகக் கொள்ளலாம். வலைப்பதிவர்களுக்கென்று ஒரு போட்டியை, வெகு சிரத்தை எடுத்து நடத்தி முடித்திருக்கும், இன்னும் பல நிகழ்வுகளை நடத்தவிருக்கும் திரு 'சிவராம்'(பைத்தியக்காரன்) மற்றும் திரு 'ஜ்யோவ்ராம் சுந்தர்' இவர்களுக்கும், இவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட அனைவருக்கும், 20 சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட இசைந்திருக்கும் 'கிழக்கு' பதிப்பகத்தாருக்கும், திரு பத்ரி அவர்களுக்கும், பரிசு பெற்ற மற்ற பதிவர்களுக்கும், போட்டியில் உற்சாகத்தோடு கலந்து கொண்ட பதிவர்களுக்கும், என் எழுத்தை தொடர்ந்து வாசித்து ஊக்குவித்தும், குறைகள் சொல்லியும் பின்னூட்டமிடும் நண்பர்கள் அனைவருக்கும், இந்தப் போட்டிக்கென நான் எழுதி இருந்த மூன்று சிறுகதைகளில் இதைத் தான் அனுப்ப வேண்டும் என்று ஒரு மனதாகத் தெரிவித்த நண்பர்கள் சுரேஷ்பிரபு, சுரேன் கீர்த்தி, ஞானசேகர் இவர்களுக்கும், என் படைப்புகளுக்கு முதல் வாசகியாகவும் இக்கதைக்காக நான் வைத்திருந்த இரு தலைப்புகளுள் இதைத் தேர்வு செய்து அளித்தும் இருக்கும் என் தோழி சுசித்ராவுக்கும், என்றும் என்னை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும் என் பிரியத்துக்குரிய, என் மீது பிரியமான அனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும்.....

-ப்ரியமுடன்
சேரல்

சிறுகதைக்கான தொடுப்பு : http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html

போட்டி முடிவுகள் : http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

12 comments:

thamizhparavai said...

congrats friend...

Vidhoosh said...

ரொம்ப சந்தோஷம் சேரல். வாழ்த்துக்கள்.

-வித்யா

மண்குதிரை said...

innum vaasikkavillai nanba

irunthaalum en vaazhththukkal

ny said...

வாழ்த்துக்கள் சேரல்.. நீங்கள் தொடப்போகும் உயரம் என்னை இன்னும் மகிழ்விக்கிறது!!

யாத்ரா said...

மிக்க மகிழ்ச்சி சேரல், வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

உரையாடல் சிறுகதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

மிக்க மகிழ்ச்சி சேரல். வாழ்த்துகள் :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மகிழ்ச்சி .
வாழ்த்துகள்

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Unknown said...

இதைப் பற்றிய உங்கள் மடலைக் கண்டதுமே மகிழ்ந்தேன். நண்பர் ரிஷான் எழுதிய 'அம்மாவின் மோதிரம்' கூட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆக என்னுடைய இரண்டு பதிவுலக நபர்கள் வெற்றி பெற்றது எனக்கு இரட்டை மகிழ்ச்சி.

தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் சேரல்...

raj said...

வாழ்த்துக்கள்.