புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, May 11, 2009

இலக்கியக்கூடல்

இலக்கியக் கூட்டங்கள் எனக்கு மிகப் புதியவை. நண்பர்கள் பிரவின்ஸ்கா, மற்றும் கோகுல கிருஷ்ணன் இவர்கள் தான் அழைப்பு விடுத்தார்கள். 'யுகமாயினி' இதழின் ஆசிரியர் சித்தன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கூடல் அது. மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடைபெறும் என்றார்கள். மைலாப்பூர் எனக்கு அதிகம் பழக்கமில்லாத பகுதி. எப்படியோ வழி கேட்டு வழி மாறி வந்து சேர்ந்தேன். லஸ் தேவாலய சாலையில், மைலாப்பூர் பகுதி நூலகத்தின் மேலே அமைந்திருக்கிறது இந்த அரங்கம். பரபரப்பு அதிகமற்ற ஞாயிறு முற்பகல்.

பிரவின்ஸ்கா, சித்தன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஏற்கனவே என் வலைப்பூவைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார் என்று சொன்னார் சித்தன். கொஞ்சம் கொஞ்சமாக நிறையத் துவங்கியது அரங்கம். நூற்றிலிருந்து நூற்று இருபது பேர் அமரக்கூடிய அரங்கில் கடைசியில் அறுபது பேர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

சம்பிரதாயமான வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், நன்றி நவிலல், பரிசு வழங்குதல், என்றெல்லாம் எதுவுமில்லாமல் நேரடியாக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சித்தன் அவர்கள் முதலில் பேசினார். 'எப்படி யுகமாயினி என்னுடையதில்லையோ, அது போல இந்த இலக்கியக் கூடலும் என்னுடையதில்லை. உங்களுடையது' என்று தொடங்கினார்.

இந்த இலக்கியக் கூடலுக்கான தேவை, அதன் நோக்கம் குறித்து சில வார்த்தைகள் பேசிவிட்டு, இன்று முதல் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் இந்தக் கூடல் நிகழும் என்றும், அதை இளைய தலைமுறையிலிருந்து யாரேனும் ஒருவர் நடத்தித் தருவார் என்றும் அறிவித்தார். இந்த முறை நடத்தித் தந்தவர் நண்பர் பிரவின்ஸ்கா.

முதல் நிகழ்வு, கவிஞர் ரவி சுப்ரமணியத்தின் உரை. 'புதுக்கவிதையும் இசையும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கட்டற்ற காட்டாறாக திசையெங்கும் திரண்டோடும் புதுக்கவிதையை இசையோடு சேர்த்தால் எப்படி இருக்கும் என்ற அவரது பரீட்சார்த்த முயற்சிகள் குறித்துப் பேசினார். இசைஞானி இளையராஜா, இவரது கவிதைகளுக்கும், கவிஞர் கனிமொழியின் கவிதைகளுக்கும் இசை அமைத்த நிகழ்வு தனக்கான தூண்டுகோல் என்றார். ஞானக்கூத்தன், நகுலன், ந.பிச்சமூர்த்தி இவர்களின் கவிதைகளைத் தான் இட்ட மெட்டுகளில் பாடிக் காட்டினார். இந்தப் பரிட்சார்த்த முயற்சி பாராட்டுதற்குரியதே.

தமிழின் இசை என்ற பாகம் கவனிக்கப்படாமலே போய்விட்டது என்ற ஆதங்கம் அவர் பேச்சில் ஒலித்தது. இசைவாணர்கள் தமிழை மறந்து போனதும், தமிழ்க் கவிஞர்கள் இசையைக் கற்றுக்கொள்ளக்கூடாத, தீண்டத்தகாத கலையாக பாவித்ததும் தமிழின் துர்ப்பாக்கியமே என்றார்.

இரண்டாவதாகப் பேசியவர் கவிஞர் வெங்கட் தாயுமானவன். இவரைப் பற்றிய அறிமுக வரிகளே எல்லோரையும் அவர் வசம் இழுத்துச் சென்றுவிட்டன. இவர் கடந்த ஏப்ரல் மாதமே இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒரு புற்று நோயாளி. திரைத்துறையில் சாதிக்கப் போராடிச் சோர்ந்து போன சமயத்தில், இந்த மாதம் இவர் இயக்குகிற படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. அறிமுக வரிகளால் தன் மேல் ஏற்பட்டிருந்த கழிவிரக்கத்தைத் தன் பேச்சால், தன் கவிதைகளால், தன் கவிதைக் காதலால் துடைத்தெறிந்தார் வெங்கட் தாயுமானவன் என்றே சொல்ல வெண்டும்.

சித்தன் அவர்கள் சொன்ன செய்திகளோடு, தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இன்னும் சில செய்திகளை, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பின் 'ஜீவனின் கவிதை' என்ற தலைப்பிலான தன் பேச்சைத் தொடங்கினார். கவிக்கோ அப்துல் ரஹ்மானின் மாணவர் இவர். அது கூட ஒரு சுவையான செய்திதான். இவர் படித்த காலத்தில் வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம் கிடையாதாம். அதனால், மற்ற வகுப்புகளுக்கு கவிக்கோ அவர்கள் பாடம் நடத்தும்போது அவர்களோடு சேர்ந்து பாடம் கேட்டிருக்கிறார் இவர்.

வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் கவிதைகளைத் தேடிப்பிடித்து ரசிக்கிறார். படைப்பை ரசிப்பது எல்லோரும் செய்யும் ஒரு செயல்தான். இவர் படைப்போடு, படைப்பாளியையும் சேர்த்தே ரசிக்கிறார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் கன்னியாகுமரியில் அவர் வீட்டில் சந்தித்த சுவையான அனுபவத்தைப் பற்றிச் சொன்னார்.

கவிதை பற்றிய புரிதலை நோக்கிய இவரது பயணம் வெகு இளம் வயதில் துவங்கி இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், வழிகாட்டிகள், வாசம் வீசிச் சென்ற கவிதைகள் என்று பலவற்றைப்பற்றியும் பேசினார். நல்ல கவிதை எது என்பதைத் தெரிந்துகொண்ட போது தன் வயது 28 என்கிறார்.

இவர் பள்ளி மாணவ்ர்களுக்கான நினைவுப் பயிற்சியை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறார். தொடர்ந்து எட்டு மணி நேரம் கூடப் பேசக் கூடியவன், நோயின் தாக்கத்தால் இப்போது தொடர்ந்து பேச முடியாமல் இருக்கிறேன் என்றார்.

இறுதியாகத் தன் மூத்தத் தலைமுறைக்கு ஒரு வேண்டுகோளை வைத்து விடைபெற்றுக்கொண்டார். கவிதையின் நிலை இன்று சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பதிப்பகங்கள் கவிதைகளை வெளியிட முன் வருவதில்லை. கவிதை இன்னது என்று தெரியாமலேயே இலக்கியம் செய்யத் தொடங்கி விடுகிறது இன்றைய தலைமுறை. 'சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என்று ஆட்டோவின் பின் எழுதி இருக்கும் வாசகங்களைக் கவிதை என்று நினைத்திருந்தேன் நான். இன்றும் அப்படிச் சிலர் இருக்கிறார்கள். இதற்கான மாற்று என்ன என்று யோசியுங்கள். இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டுங்கள் என்று கோரி அமர்ந்தார் வெங்கட் தாயுமானவன். அவரின் கோரிக்கை நியாயமானதே என்றெனக்குத் தோன்றியது. உண்மை உணர்ந்த மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கும்.

இலக்கியக் கூடலின் இறுதி நிகழ்வாக அமைந்தது, ஆய்வாளர் சாமிநாதன் அவர்களின் உரை. மா.ராமசாமி அவர்கள் மொழி பெயர்த்திருக்கிற 'அடிமையின் மீட்சி'(Up from the Slavery) என்ற வாழ்க்கை வரலாற்று நூல் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். புக்கர்.டி.வாஷிங்டன் என்ற அமெரிக்கக் கருப்பர் இனப் புரட்சியாளரின் வாழ்க்கையைச் சொல்லும் நூல் இது. மற்ற புரட்சியாளர்கள் போல் போராட்டம் நடத்துவதோ, கலவரம் செய்வதோ இல்லாமல் இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கருப்பர் இனத்தவரை இன்று அமெரிக்க அதிபர் அளவிற்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது என்றார். இவரது தத்துவங்கள் மிக இலகுவானவை. இவர் கருப்பர் இனத்துக்குச் சொன்னதெல்லாம் இது தான் 'படியுங்கள்; விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சமுதாயத்தில் உங்களுக்கென்று ஒரு தேவையை உருவாக்குங்கள். உங்களால் மட்டுமே அது முடியும் எனும்படியான செயல்களை நிகழ்த்திக் காட்டுங்கள். உங்களுக்கான உரிமை உங்களுக்கு, தானே கிடைக்கும்'

கொஞ்சம் ஆங்கிலம் கலந்த இவரது பேச்சு, ஈர்க்கும் விதமாகவே அமைந்தது. ஆனாலும், தமிழிலக்கியக் கூட்டங்களில் ஆங்கிலப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் என்றெனக்குத் தோன்றியது.

இவரது உரை முடிந்த பின், விவாத நேரம் தொடங்கியது. ரவி சுப்ரமணியத்தின் கருத்தின் மேல் ஓர் அழகான கேள்வி விழுந்தது. புதுக்கவிதை என்பதே எந்தத் தளைகளும் அற்ற, உணர்வுகளுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கக் கூடிய ஓர் இலக்கிய வகை. அதில் மீண்டும் இசையைக் கொண்டு திணிப்பதால் அதன் அடிப்படையே பாதிக்கப்படுமே என்றொரு கேள்வி. மேலும் கவிஞர் பேசும்போது, ஞானக்கூத்தனின்

'எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்
எல்லா மொழியும் நன்று
கோபிக்காதீர் நண்பரே
அவற்றுள் தமிழும் ஒன்று'

என்ற கவிதையை இசையோடு பாடிக் காட்டினார். அவர் அமைத்த மெட்டு மிக மென்மையான ஒன்றாக அமைந்திருந்தது. 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?' என்ற பாடலை நினைவு படுத்திப் பாருங்கள். அப்படியான ஒரு மெட்டு. இந்த மெட்டு கவிதையின் உணர்வை, அது காட்டுகின்ற எரிச்சல் கலந்த கோபத்தைச் சிதைத்து விடுவதாக ஒரு கருத்து எழுந்தது. கவிஞர் ரவி சுப்ரமணியம் பதில் சொல்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தார். இந்தக் கவிதைக்கு ஏற்ற மெட்டல்ல அது; குறைந்த கால அவகாசத்தில் அவசர கதியில் அமைக்கப்பட்ட மெட்டு; அதனால் இந்தக் குறை ஏற்பட்டிருக்கலாம். அதனால் புதுக்கவிதைக்கு இசையே கூடாது என்று சொல்லி விட முடியாது என்ற கருத்தையும் முன் வைத்தார்.

இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்தினார் தமிழிசைச் சங்கத்தைச் சேர்ந்த தண்டபாணி தேசிகரின் மாணவர் ஒருவர்; அவர் பெயர் அறிவிக்கப்பட்டதாக நினைவில்லை; தன்னை ஒரு சாதாரணமானவன் என்று அறிமுகம் செய்து கொண்டார் அந்த 77 வயது பெரியவர். தண்டபாணி தேசிகரின் பாடல்களைப் பாடிக் காட்டினார். தமிழர்களைத் தமிழில் பாடச் சொல்லிக் கெஞ்ச வேண்டியிருக்கிறது என்று கவலைப் பட்டார். இவர் தமிழிசைச் சங்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், இசை மாத இதழ் ஒன்றை நடத்துகிறார் என்றும், தமிழிசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகிறார் என்றும், பிறப்பால் ஓர் ஈழத்தமிழர் என்றும் பின்னர் அறிமுகம் செய்து வைத்தார் திரு.சித்தன்.

நன்றி என்ற வார்த்தையுடன் எளிமையாக முடிந்தது இலக்கியக்கூடல்.

துளிகள்:

* நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் எனக்கு முகம் தெரிந்த ஒரே ஒருவர் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன். நண்பர்கள் அடையாளம் காட்டிய இன்னொருவர் கவிஞர் வைத்தீஸ்வரன். அவரைப் பார்த்ததும் இதற்கு முன் நான் பதிவிட்ட 'அனுமானங்களின் பொழுதுகள்' கவிதைதான் நினைவுக்கு வந்தது. கவிதைகளில் வேறு முகம் காட்டியிருந்தவர் நேரில் வேறு மாதிரி இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவின் புகைப்படத்தை முதன் முறை பார்க்கும்போதும் கூட அவர்தான் சுஜாதா என நம்ப மறுத்தேன் நான்.

* இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே முப்பது வயதுக்குட்பட்டவர்கள், நான், நண்பர்கள் பிரவின்ஸ்கா மற்றும் கோகுல கிருஷ்ணன் மட்டும்தான். அதிலும் மிக இளையவன் நான் தான். மற்ற எல்லோருமே முப்பதின் இறுதிகளைத் தாண்டியவர்கள்.
'தன்னை விடக் கீழே இன்னொருவன் இருக்கிறான் என்ற நினைவுதான் பல மனிதர்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது; அந்தச் சின்ன சந்தோஷம் கூட இன்று எனக்கு இல்லாமல் செய்து விட்டீர்களே' என்றேன் நண்பர்களிடம் (உண்மையில் பிரவின்ஸ்கா என்னை விட இளையவர் என்று நினைத்திருந்தேன்)

* புறப்படும் முன் வெங்கட் தாயுமானவனிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தோம். சரித்திர புருஷர்கள் எங்கேயோ பிறப்பதில்லை. இதோ நம்முடனேயே பிறந்து, நாம் விடும் மூச்சுக்காற்றைச் சுவாசித்தபடி நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

16 comments:

மண்குதிரை said...

நல்லா எழுதியிருக்கிறீங்க சேரல்.

கொடுத்துவைத்தவர்கள். சென்னையில் இருப்பதால் அனுபவிக்கிறேர்கள்.

Chithan Prasad said...

வணக்கம் சேரல்
1. 20 பேர்களுக்கு மேல் வரமாட்டார்கள் என்கிற நிலமையில் படுத்துக்கிடந்த இலக்கியக் கூட்டத்துக்கு க்லுகோஸ் தந்து 62 பேர்களை கூட்டியது ஒரு வியப்புக்கு உரிய விஷயம் தான். அதிலும்க் குறிப்பாக உங்களைப் போன்ற இளைஞர்களை வரவழைத்தது அந்த அக்கறையினால்தான்.3 என்பது 30 ஆக விருப்பம்தான்.
2. இசை குறித்து கேள்வி எழுப்பியவர் தேவகோட்டை வா. மூர்த்தி. சிறந்த விமர்சகர். இனி வரும் மாதங்களில் சற்று முன்பாக வந்திருந்து அனைவரிடமும் பரிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். எஸ்பொ, சௌரி,எழில்வேந்தன்,பிரக்ஞை ரவி, ஷங்கரநாராயணன்,திலீப்குமார், அய்யப்ப மாதவன், கிருஷாங்கனி,கனடா படைப்பாளி தமிழ்நதி, நிர்மலா ராஜேந்திரன், மதுமிதா,தாரா கணேசன்,யாழினி முனுசாமி, அமுதோன்,தீபம் திருமலை என மூத்த படைப்பாளிகள் அனைவரையும் நீங்கள் பரிச்சயபட வேண்டியவர்களே
3. அந்த தலைமுறை கல்வி கற்ற போது ஆங்கிலம் மட்டுமே பிரதானமாக கருதப்பட்டக் காலம்.அவர்கள் ஆங்கிலத்திலேயே சிந்திக்கக் கற்றவர்கள்.தமிழிலும், தமிழ் எங்கள் வாழ்வு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நன்றாக தமிழ் அறிந்தவர்கள்.அவர்களுக்குப் பின்னரே தமிழ் தனித் தமிழ் என்கிற அரசியல் வெற்றுக் கோஷங்கள் வந்து 50 ஆண்டுகால கலாச்சாரச் சீரழிவை ஆரம்பித்துவைத்தன.
4. ஈழத்துப் பெரியவரின் பெயர் நல்லை குமரன் என்கிற முத்துக்குமாரசாமி.
நன்றி சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி மண்குதிரை!

சித்தன் அவர்களுக்கு,
நன்றி! நீங்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த இலக்கியக்கூடல் என் போன்ற தொடக்க நிலை எழுத்து ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே அமையும் என்று நம்புகிறேன். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி! மீண்டும் ஒரு இலக்கியக் கூடலில் உங்களையும், மற்ற மூத்த சிந்தனையாளர்களையும் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் said...

சேரல், நானும், நண்பர் அக நாழிகை பொன்.வாசுதேவனும் கூட சற்று தாமதமாக வந்திருந்தோம். கடைசி வரிசையில் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். முன்னமே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம். நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.மேடையில் இருந்த இளைஞர்தான் பிரவின்ஸிகாவா? அவருக்கு என் தோழமையும் வாழ்த்துகளும்.

ச.முத்துவேல் said...

முந்தைய கவிதைகள்(அண்மைய வரவுகள்) படித்தேன். நல்லாயிருக்குது

யாத்ரா said...

நல்லதொரு பதிவு சேரல், மாதமொரு முறை கூடல் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது, நானும் வருவதாயிருந்தது கூட்டத்திற்கு, எதிர்பாராது வரமுடியாமற் போய்விட்டாலும் தங்களது பதிவு கூட்டத்திற்கு வந்த நிறைவைக் கொடுத்தது.

ச.பிரேம்குமார் said...

இலக்கியத்தேடல் இருக்கும் இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள் சேரல். ஆனால் முழு நேரமாக அவர்கள் ஈடுபட முடிவதில்லை. ஏன் என்று உனக்கே தெரியும்.

பிரவின்ஸ்கா said...

// முந்தய பின்னுட்டத்தில் எழுத்துப் பிழை இருக்கிறது.
இப்பொழுது சரி செய்து விட்டிருக்கிறேன். //

இலக்கியக் கூடல் எனக்கும் புதிது தான்.

சித்தன் அவர்கள் தொடர்ந்து உற்சாகம் தந்து கொண்டே இருக்கிறார்.
அவருக்கு நன்றி சொல்லி மாளப்போவதில்லை.
என்னை நேரில் அழைத்து இலக்கியக் கூடலை நடத்தித் தரவேண்டும்
என்றார். அந்த கணம் என் முழியை பார்த்து சிரித்தே விட்டார்.
எனக்கு உற்சாகம் தந்து மேடை ஏற்றி விட்டார்.


என் உளறல்களை அத்தனை பெரியார்களும் , பொறுத்துக்கொண்டு
இலக்கியக்கூடல் முடிந்ததும் என்னை தட்டிக் கொடுத்து
உற்சாகப் படுத்தினார்கள் .
இந்த பின்னுட்டதின் வாயிலாக
அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சேரல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா.

இது என் சங்கப்பலகை said...

அன்பு சேரல்.,
நாளைய தமிழின் செழுமையை இன்றே காண்கிறேன் உங்கள் எழுத்தில்.உணர்வுபூர்வமான நேர்முக வர்ணனையாய் அமைந்துள்ளது கட்டுரை. எனக்கும் மிக வருத்தம்.அனைவரோடும் உரையாட முடியவில்லை. அடுத்த கூடலில் தீர்த்துக்கொள்வோம்.
உங்கள் தமிழ் எனக்கு அதீத நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ் தனக்கு தேவையானவர்களை ஆங்காங்கு வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.வாழ்க..!வளர்க..!

இது என் சங்கப்பலகை said...

அன்பின் சேரல்.,
நிகழ்வை விழிநேர் நிறுத்துகிற..மொழி நடை.அசை போடும் மாட்டின் லயிப்பு விவரப்பொலிவில்.கைதேர்ந்த பூக்காரியின் கைவண்ணம் வாக்கிய தொகுப்பில்.
இன்னும் சொல்லவா..?வருங்கால தமிழ் உன் வசம் சுகமாக வாழும்.

வலைத்தோட்டத்தில் நீ நட்டு வைத்திருக்கும் ஒவ்வொரு ரோஜா செடியின் வேர்களிலும் ஓடி ஓடி பின்னூட்ட நீரிட ஆசை முகிழ்க்கிறது.

ரசிக்கிறேன்...ரசிக்கிறேன்..ரசிக்கிறேன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ச.முத்துவேல்,
அருமையான வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேன்; இழந்து விடவில்லை. அடுத்தக் கூடலில் கண்டிப்பாகச் சந்திப்போம்.
கவிதைக்கான வாழ்த்துக்கு நன்றி!

நன்றி யாத்ரா!
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

நன்றி பிரேம்!
நேற்று நாம் பேசிக்கொண்டதைப் போல, புறச் சூழ்நிலைகள், வாழ்க்கைத் தேவைகள், இலக்கியத்தேடலில் இருந்து விலக்கி எங்கோ இட்டுச் சென்றுவிடுகின்றன. இதை மீறி இயங்க முடிந்தவன் வெற்றி பெற்றவனாகிறான். பார்ப்போம் :)

நன்றி பிரவின்ஸ்கா!
அவைக்கூச்சம் என்பது இயல்பான ஒன்றுதான். முதல் முறை சைக்கிள் ஓட்டப் பழகுவதுபோல. பழகிய பின் வித்தைகள் கூடக் காட்டுவீர்கள் பாருங்கள். எழுத்துப் பிழையோடு இருந்த உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

@இது என் சங்கப்பலகை,
கவிஞர் வெங்கட் தாயுமானவன் அவர்களுக்கு,
உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நன்றி! வாழ்க்கையைக் கவிதை செய்யவும், கவிதையை வாழ்க்கை செய்யவும் இன்னும் முயற்சி செய்வேன்.

-ப்ரியமுடன்
சேரல்

இது என் சங்கப்பலகை said...

அன்பின் சேரல்,
மடலாடற் குழுமங்களில்..தங்களின் இலக்கிய கூடல் நிகழ்வு கட்டுரையைஏற்றி உள்ளேன். தங்களின் மின்னஞ்சல்முகவரி, தொலைபேசி எண் தரவும்.
என்னுடையது thaayumaanavan@gmail.com

9840279035

Chithan Prasad said...

வணக்கம் சேரல் மற்றும் நண்பர்கள்
ஒரு விளக்கம் இங்கு அவசியமாகிறது. புதுக்கவிதையும் இசையும் என்பது மீதான கேள்வி சேரல் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. காரணம் ஞானக்கூத்தன் அந்த 'எனக்கும் தமிழ் தான் மூச்சு ' என்கிற கவிதை எழுதிய காலக்கட்டத்தை அறியாததே. அன்று திராவிடத்தின் பிராம்மண எதிர்ப்பு என்பது உச்ச கட்டத்தில் , இறங்கு விசை ஏற்படும் முன் , இருந்த போது எழுதப்பட்டது,நான் அப்போது இன்று நீங்கள் இருப்பதை போல. பிரம்மிப்புடன் சுற்றி நடப்பவை குறித்து அக்கறையுடன் கவனித்து வந்த காலமது. ஞானக்கூத்தன் அவர்களுக்கும் வானம்பாடி இயக்கத்தாற்கும்( கோவை ஞானி, நா, காமராசன், மு.மேத்தா, புவியரசு,தமிழவன்,அக்னிபுத்ரன்,போன்றோர் முன்னெடுத்த அமைப்பு. அழகியல் தவிர்த்து கோஷங்களுடன் கவிதையை முன்னெடுத்தது. )நடந்த பெரிய சர்ச்சையினூடே ஞானக்கூத்தனை தாக்க பிராம்மண, சமஸ்கிருத , ஆங்கில எதிர்ப்பை கையில் ஏடுத்தார்கள். அப்போது கோபத்துடன் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை இது. அந்த கோப உணர்வு இந்த மென்மையான ராக மெட்டமைப்பால் வெளிப்படவில்லை என்பதே தேவக்கோட்டை வா.மூர்த்தி அவர்களுடைய கேள்வியாக அமைந்திருந்தது. அந்த உணர்வு அந்த கவிதையைப் பாடலாக்கியதில் வெளிப்படவில்லை என்றுதான் ரவிசுப்ரமணியனும் ஒப்புக்கொண்டார். அந்த கேள்வியும் பதிலும் அந்த குறிப்பிட்ட கவிதையின் வரலாறு காரணமாக எழுந்ததே.வானம்பாடிகள் பற்றிய புத்தகம் கிடைத்தால் நீங்கள் அன்னைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.( படிப்பது வேறு வாசிப்பது வேறு)பிச்சமூர்த்தி தொடங்கி தமிழ் புதுக் கவிதைக்கென ஒரு வரலாறே இருக்கிறது. தமிழ் கவிதை என்று கோவை ஞானி ஒரு தலையணை அளவுக்கு புத்தகமே எழுதியுள்ளார்,
உங்களுக்கு முன்னால் நடந்த வரலாறை அறிந்துணர்ந்து, சமகால படைப்புகளை அதன் மீதான தாக்கத்தில் அலசி, கவிதையை எதிகாலத்துக்கு முன்னெடுப்பதுதான் நீடித்து நிற்கும். அஸ்திவாரம் மிக மிக அவசியம் நண்பர்களே
சித்தன்

ரெஜோ said...

அண்ணா, உங்களது எழுத்து , அனைவரது மறுமொழிகள் தாண்டி தங்களைப் பற்றிய பெருமிதமும் கர்வமும் ஒரு சேர என்னிடம் . நிலவோடு வரும் வில் என் நினைவில் .. வாழ்த்துகள் :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மதிப்பிற்குரிய திரு சித்தன் அவர்களுக்கு,

இலக்கியத்தின், இலக்கிய நிகழ்வுகளின், வரலாற்றின் பின்புலம் இந்தத் தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகம் ஆகவில்லை என்றே நான் கருதுகிறேன். நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இந்தத் தலைமுறையை அந்த அறிவின் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ரெஜோ
மிக்க நன்றி தம்பி!

-ப்ரியமுடன்
சேரல்