புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 15, 2009

இல்லாத முகவரிகள் - 2

திண்டுக்கல் சேர்ந்திருந்த போது மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது. நள்ளிரவில் பேருந்து நிலையங்களில் இருத்தல் என்பது ஒரு சுகானுபவம். பல முறை இந்தச் சுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. பாதி கலைந்த தூக்கத்துடன், ஒரு தேநீர் பருகி, அறிமுகமில்லாத ஒரு நகரத்தின் அமைப்பை அதன் பேருந்து நிலையத்தை வைத்து எடை போடுவது ஒரு நல்ல அனுபவம். இரவுகளில் எல்லா ஊர்களுமே அழகாக இருக்கின்ற்ன. இரவுகளில் அறிமுகமாகிற ஊர்கள் வெகு எளிதாக நம்மோடு இணக்கம் கொண்டு விடுகின்றன. எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் இந்த நேரத்தில் நிலவும் சிறு இரைச்சல் சேர்ந்த நிசப்தம் பயணத்துக்கு அழகு சேர்க்கிறது. இரவு முழுவதும் விழித்திருக்கும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். செய்தித்தாள்கள் விற்கும் கடைகள், தேநீர்க்கடைகள், பூக்கடைகள், சிறு ஓட்டல்கள், இந்த நள்ளிரவிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தில் தெரிந்த கவிஞர் வைரமுத்துவின் புகைப்படம் போட்ட விளம்பரப்பலகையைப் படித்து விட நகர்ந்தேன். கவிஞரின் பாற்கடல் என்ற புத்தகம் அப்போதுதான் வெளியாகி இருந்தது. அதற்கான விளம்பரப்பலகை அது. வைரமுத்து அதற்கு முந்திய தினங்களில்தான் அங்கு வந்து போயிருந்தார் என்று அறிவித்தது அது.

இங்கிருந்து மதுரை செல்ல வேண்டும். பகல் பொழுதென்றால் சாரி சாரியாகப் பேருந்துகள் போய்க்கொண்டிருக்கும். இந்த இரவில் மதுரைக்குப் பேருந்துகள் குறைவுதான் என்றார் தேநீர்க்கடைக்காரர். அரை மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து மதுரை வழியாக எங்கோ செல்லும் பேருந்து ஒன்று வந்து சேர்ந்தது. அதில் தொற்றிக் கொண்டோம். முதல் முறையாக ஓட்டுநருக்குப் பின் இருக்கும் இருக்கையில் எங்கள் இருவருக்கும் இடம் கிடைத்தது. சாலையை, அதில் படர்ந்திருக்கும் இருளை நக்கிக்கொண்டே செல்லும் ஒளியின் ஆயிரமாயிரம் நாக்குகளை ரசித்த படியே பயணித்தோம். தூக்கம் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலேயே இறங்கிப் போய் விட்டிருந்தது. எதுவும் பேசாமல் பயணப்பட்டோம்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எங்களை உதிர்த்துவிட்டு நகர்ந்தது பேருந்து. இரவு மூன்று மணியைத் தொட இன்னும் சில நிமிடங்களிருந்தது. எங்களின் அன்றைய பொழுது அப்போதே துவங்கிவிட்டது. காலைக்கடன்கள் முடித்து அடுத்த இலக்கான விருதுநகரை நோக்கிக் கிளம்பினோம். நான் பயணித்திராத இன்னொரு வழியில் என் முதல் பயணம். இன்னும் விடியாமல் இருக்கும் சுற்றுப்புறத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டுமென்று கண்களைக் குறுக்கி, இடுக்கிப் பார்த்தேன். எதுவும் புலனாகவில்லை. விருதுநகர் அடைந்த போது இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடுவேன் என்றது கீழ்வானம். மக்கள் கூட்டம் நிறைந்திருந்த பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பேருந்து, புதிய பேருந்து நிலையத்தில் தான் கிடைக்கும் என்று சொன்னார் ஒருவர். நம்பி புறப்பட்டோம். ஒரு நகரப்பேருந்தில் புதிய பேருந்து நிலையம் என்று சொல்லப்பட்ட பகுதியை அடைந்தோம். அது ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு பகுதி, பேருந்துகள் மட்டும் வரும், போகும், உள்ளே ஒருகடைகூட இல்லை என்றெல்லாம் நாங்கள் உணர்ந்து கொள்வதற்குள் எங்களை இறக்கிவிட்ட பேருந்து ஒரு சுற்று சுற்றி விட்டு பறந்து போயிருந்தது.

எங்களைத் தவிர ஆட்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதேதோ கதைத்தபடி பேருந்துக்காகக் காத்திருந்தோம். எதுவும் வரவில்லை. வெளியே ஒரு சிறு நடை போட்டோம். நம்மோடு விதி விளையாடி இருக்கிறது என்று புரிந்து கொண்டு, அடுத்து வந்த ஒரு நகரப் பேருந்தைப் பிடித்து மீண்டும் பழைய பேருந்து நிலையம் சேர்ந்தோம். அங்கே இருப்பவர்கள் யாருக்கும் எங்களைத் தெரியாது, நாங்கள் பட்ட அவமானமும் தெரியாது என்ற எண்ணம் ஆறுதல் அளித்தது. ஆறரை மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்தோம்.

'வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு வண்ணம் கொள்கிறது நாளின் விடிவும், முடிவும்' நான் எழுதிய வரிகளில் மிக மிக அனுபவித்து எழுதிய வரி இது. அது போன்ற ஒரு மாறுபட்ட வண்ணம் கொண்ட காலைப் பொழுதில் இந்தப் பயணம் அமைந்தது. விருதுநகரின் காய்ந்த நிலங்களை விட்டு பசுமையான சில இடங்கள் வரத்தொடங்கிய போதே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிட்டோம் என்றான் நண்பன். ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த பிறகுதான் முதல் சோதனை. இந்த வட்டாரத்தில் அர்ச்சுனாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு நல்லதங்காள் தன் ஏழு பிள்ளைகளோடு விழுந்து இறந்து போன கிணறும், மக்கள் அவளைத் தெய்வமாகத் தொழும் கோவில் ஒன்றும் இருக்கின்றன. அங்கு எப்படிப் போக வேண்டும் என்ற கேள்வியை யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.

தொடர்வதற்கு முன், ஒரு சிறு முன்னோட்டம். எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி' படித்தபிறகு, அதில் எங்களை மிகவும் கவர்ந்திருந்த நல்லதங்காள் விழுந்த கிணறைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நல்ல தங்காளின் கதையைச் சொல்லிவிட்டு, அந்தக் கிணறை அவர் பார்க்கும்போது, அவரிடம் பேச்சு கொடுத்த ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியின் வாக்காக 'நல்லதங்காள் என்பது ஒரு பெண்ணல்ல. எல்லோருமே நல்லதங்காள்தான். துன்பப்பட்டே இவர்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். வாழ்க்கையும் இவர்களைத் துரத்திக்கொண்டே வந்து கிணற்றில் தள்ளிவிடுகிறது' என்பது போலச் சொல்வார். நல்லதங்காளே தன் முன் வந்து பேசுகிறாளோ என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிடுவார். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு வந்த ஈர்ப்புதான் எங்களை இங்கே கொண்டுவந்து நிறுத்தி இருந்தது.

இப்போது வழி கேட்க வேண்டும். யாரிடம் கேட்கலாம்?

8 comments:

Unknown said...

தொடரட்டும் உங்கள் பயணம்...வாழ்த்துகள் தோழரே!

ஈரோடு கதிர் said...

அழகான அனுபவம்.... ரசித்தேன்....

ச.பிரேம்குமார் said...

//பாதி கலைந்த தூக்கத்துடன், ஒரு தேநீர் பருகி, அறிமுகமில்லாத ஒரு நகரத்தின் அமைப்பை அதன் பேருந்து நிலையத்தை வைத்து எடை போடுவது ஒரு நல்ல அனுபவம்//
பெங்களூரில் இருந்து புதுவைக்கு பயணப்படும் போதெல்லாம் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இரவுகளை இதே போல் கழித்ததுண்டு. அதை நினைவுப்படுத்துவிட்டது பதிவு

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரசியமாய் இருக்கிறது

யாத்ரா said...

தொடருங்கள் சேரல், நன்றாக இருக்கிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@gokul,
நன்றி தோழரே!

@கதிர்,
நன்றி! தொடர்ந்து வாருங்கள்

கருத்துக்கு நன்றி பிரேம்!

@ப்ரியமுடன்......வசந்த்,
நன்றி! தொடர்ந்து வாருங்கள்

நன்றி yathra!

-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

எழுத்தின் போக்கு, எல்லோரையும் கூடவே கைபிடித்து அழைத்துச் செல்கிறது. அருமை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்